Tuesday 29 January 2013

"வாரியார் வாழ்க்கை வரலாறு" வடலூர் திருப்பணி

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

அச்சிட அச்சிட
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1906 – 1993) எழுதுகிறார்:
அச்சுத்தவறில் ஆண்டவன் திருவுளம்
1936 இல் வயலூர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஹிந்துப் பத்திரிகையில் அதனை வடலூர் திருப்பணி என தவறாக வெளியிட்டு விட்டார்கள். இதனைப் பார்த்த திருச்சிராப்பள்ளி எனது ஆப்த நண்பர் முனிசிபல் மானேஜர் திரு.வி.எச்.லோகநாதபிள்ளை அவர்கள் “ஐயா வடலூர் திருப்பணியை நீங்கள்தான் செய்யப் போகின்றீர்கள்” என்று என்னைப் பார்த்துக் கூறினார். நான் வடலூர்த் திருப்பணியைப் பற்றி சிந்திக்காத காலம். அது நம்மால் ஆகக் கூடிய காரியமா என்று கேட்டேன்.
வடலூரில் வள்ளலார் சுவாமிகள் மூன்று நிறுவனங்கள் அமைத்தார்கள். உடம்பு தழைக்க சத்திய தர்மசாலையும் உணர்வு தழைக்க சத்திய வேதபாடசாலையும், உயிர் தழைக்க சத்திய ஞான சபையும் நிறுவினார்கள். இவற்றுள் சத்திய ஞான சபை பழுதடைந்துவிட்டது. பாலாலயம் செய்து பல ஆண்டுகளாக யாரும் திருப்பணியை மேற்கொள்ளாமல் சத்திய ஞானசபை பழுதுற்றுக் கிடந்தது, பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மற்றும் பலர் முயன்றும் திருப்பணி நடக்கவில்லை. கடலூர் ஜில்லா போர்டு தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் தலைமையில் ஒரு திருப்பணி குழு அமைக்கப்பெற்றது. இடையில் அமாவாசைப் பரதேசி அவர்கள் “நான் திருப்பணி செய்வேன்” என்று சிறிது வசூல் செய்து செப்புத்தகடுகள் வாங்கி ஒரு சிறிது பணி செய்யத் தொடங்கினார். திருப்பணிக் குழுவினரிடம் வசூல் செய்த கணக்குத் தரமறுத்தார். அதனால் அத்துடன் அது நின்றுவிட்டது.
தொடக்க தடங்கல்கள்
அப்போதுதான் லோகநாதப்பிள்ளை என்னைப் பார்த்து “ஐயா! வடலூரில் திருப்பணி தொடங்கி இருக்கிறார்கள். நாம் ஏதாவது அதில் ஈடுபடவேண்டும்” என்று சொன்னார். நானும் அவரும் மதுரையில் ஞாயிறு தோறும் வசூல் செய்தோம். திருப்பணிக்குப் பணம் கொடுத்து வாருங்கள் என்று என்னை வடலூருக்கு அனுப்பினார். 700 ரூபாய் எடுத்துக்கொண்டு வடலூருக்குச் சென்றேன். அங்கு சத்திய ஞானசபையைப் பூசனை செய்யும் சிவஸ்ரீ பாலசுப்ரமண்ய சிவாச்சாரியாரைக் கண்டு அவரிடம் தங்கினேன். பின்னலூர் வாகீசம்பிள்ளை அவர்களின் தந்தையார் திரு கணபதிப்பிள்ளையும் அங்கு வந்திருந்தார். நான் சிவாச்சாரியாரிடம் “திருப்பணிக்கு பணம் கொண்டு வந்திருக்கிறேன்.” என்று சொன்னேன். குருக்கள் “யாரும் இங்கு பொறுப்பாக இருந்து திருப்பணி செய்வாரில்லை. கணபதியாப் பிள்ளை என்ற இவர் சிறந்த அறப்பெருஞ் செல்வர் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் இவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று கூறினார்.
நான் அதுபடியே கணபதியாப் பிள்ளையிடம் ரூபாய் 700 கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றேன். இவ்வாறு மாதந்தோறும் 700 ,800 என்று எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்து வந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சாரியாரின் மேற்பார்வையில் 3000 ரூபாய் செலவில் ஜோதி மேடைக்குத் தூண்கள் செய்யப்பட்டன. மதுரையிலிருந்து லோகநாதப்பிள்ளை ஒரு எஞ்சினீயரை அனுப்பி திருப்பணிகளைப் பார்வையிட வைத்தார். அந்த எஞ்சினீயர் செய்த தூண் பாரம் தாங்காது என்று சொல்லிவிட்டார். அதனால் செய்த வேலைகள் வீணாகிவிட்டன…. திருப்பணிக்குழுத் தலைவர் பொறுப்பாக ஒருவர் திருப்பணிகளை மேற்பார்வையிட வேண்டுமென்று திருப்பணிக்குழுத் தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் சொல்லி என்னிடம் “நீங்களே பொறுப்பாக இருந்து செய்யுங்கள். ஆனால் திருப்பணிக் குழுவுக்கு உட்பட்டுச் செய்யுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். நான் “சரி” என்று திருப்பணியை முழுப் பொறுப்பாக ஏற்றுச்செய்ய மேற்கொண்டேன். சிற்பவல்லுனர் துறையூர் நா.சௌந்திரபாண்டியப் பிள்ளை அவர்களை ஸ்தபதியாக நியமனம் செய்து பல கொத்தனார்களை அழைத்து சமையல் முதலிய ஏற்பாடுகள் அமைத்துத் திருப்பணி நடைபெறச் செய்தேன்…. ஈரோடு வள்ளல் விவிசிஆர் முருகேச முதலியார் பலமுறை ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தார். அவ்வாறே நாகப்பட்டினம் பச்சைமுத்து நாடாரும் பலமுறை ஆயிரம் ஆயிரமாகத் தந்தார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் திருப்பணி நடந்தது.
கணக்கும் வழக்கும்
அறநிலையத்துறை ஆட்சிக்குழுவிலிருந்த ஒரு அதிகாரிக்கும் வேலைபார்க்கும் சௌந்திரபாண்டியப் பிள்ளைக்கும் மனவேறுபாடு உண்டாயிற்று. அவர் திருப்பணிக்குழுவைக் கலைத்துவிட்டார்.அறநிலைய ஆட்சிக்குழுவினர் திருப்பணியை நிறுத்திவைக்குமாறு ஆணை பிறப்பித்தார்கள். திருப்பணி நின்றுவிட்டது. எனக்கு மிகுந்த மனவேதனை உண்டாயிற்று. அன்பர் விவிசிஆர் முருகேச முதலியாரும் மன்னார்குடி சாமிநாத முதலியாரும் திருப்பணி நின்றிருப்பதை அறிந்து அப்போது இந்து அறநிலையத் துறை ஆணையராக இருந்த சின்னைய்யா பிள்ளையிடம் “வடலூர் திருப்பணியை வாரியார் சுவாமிகள் செய்வது மிகவும் நல்லது. அவர் வழிபாட்டில் கண்ணீர் வடித்தால் உங்களுக்கு இருபத்தொன்று தலைமுறை ஆகாது. ஆதலால் திருப்பணியை அவரிடமே ஒப்புவித்து திருப்பணி செய்ய உதவி செய்யுங்கள்” என்று கூறினார். பழனியில் சின்னைய்யாபிள்ளை என்னை சந்தித்து வடலூர் திருப்பணி கணக்குகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரினார். ஒரு ஆளை நியமித்து ஆறுமாதம் அந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்தார். இரண்டு லட்ச ரூபாய் திருப்பணி கணக்குகளை அவர் தணிக்கை செய்தார். பயணச்செலவு கணக்கு அதில் இல்லவே இல்லை. அவர் மகிழ்ந்து மீண்டும் என்னிடம் கணக்கை கொடுத்து “நீங்களே திருப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
திருவருளும் மண்ணெண்ணையும்
வடலூர் திருப்பணி நடந்துவரும் பொழுது ஒருமாதம் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமின்றி நான் அணிந்திருந்த அணிகலன்களை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். தெம்மூரில் ஒரு விரிவுரைக்கு ஏற்பாடாகியிருந்தது. அதனை தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். அன்று பெரும் மழை எங்கும் வெள்ளக்காடு என்றாலும் வைக்கோல் பரப்பி தென்னங்கீற்று போட்டு மக்கள் அமர ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று இரவு வள்ளலாரைக் குறித்து விரிவுரை செய்தேன். விரிவுரை முடிந்தது. தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளையும் அவர் மனைவியாரும் ஒரு பெரிய வெள்ளித்தட்டில் 25 சாத்துக்குடி ஆரஞ்சு பழங்கள் ஏழெட்டு வாழைப்பழச் சீப்புகள் ஆகியவற்றை வைத்து அதன் மேல் 100 ரூபாய் நோட்டுகள் கற்றையாக அவைத்திருந்தார்கள். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ரசீது போடும் பொருட்டு பணத்தை எண்ணிப் பார்த்தேன். நூறு ரூபாய் நோட்டுக்கள் 35 உருந்தன. நான் நகைகளை அடகுவைத்துக் கடன் வாங்கியிருந்த தொகை 3500. தெம்மூர் பிள்ளை நன்கொடை கொடுத்ததும் 3500. அதே தொகையை அன்பர் வழங்கியிருக்கிறார். மூவாயிரமாகவோ நாலாயிரமாகவோ கொடுக்காமல் மூவாயிரத்தைந்நூறே கொடுக்குமாறு செய்த திருவருளின் திறத்தை நினைந்து வியந்தேன்.
… நன்கொடைக்காக, பண்ருட்டி சைக்கிள் ஷாப் ஆர்.கே.முருகேசநாயுடு அவர்கள் தனக்கிருந்த ஒரே ஒரு வீட்டை விற்று 1008 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்… ஒருமுறை அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் சின்னையாபிள்ளை சுமுகம் இன்றி வெடு வெடு என்று பேசினார். நான் இது பொதுக்காரியம். பொதுஜனங்களிடம் காரியசித்திக்கு மருந்து மௌனம் ஒன்றேயாகும் என்று சும்மா இருந்தேன். … எனது தாய்மாமா PWD அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிவகுரு முதலியார் திருப்பணி தொடக்கத்திலிருந்து இத்திருப்பணியில் உடனிருந்து உழைத்து வந்தார். மண்ணெண்ணெய் பாட்டில் வடலூரில் மூன்று அணா. குறிஞ்சிப் பாடியில் இரண்டரை அணா. இந்த அரையணா லாபத்துக்காக வடலூரிலிருந்து குறிஞ்சிபாடிக்கு மூன்றுமைல் நடந்து போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவார்.
…”வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன். 24-5-1950 தமிழ் வருடம் விக்ருதி சித்திரை 12தியதியன்று கும்பாபிஷேகமென்று உறுதி செய்து பத்திரிகை அச்சிட்டேன்.
கொத்தன் கும்பாபிஷேக நாள் குறிக்கலாமா?
வடலூர் அறநிலையங்களின் அறங்காவலர்கள் மூவரும் அறநிலைய ஆட்சித்துறை கோர்ட்டில் கும்பாபிஷேகம் செய்யக்கூடாதென்று வழக்குத் தொடர்ந்திருந்தார்கள்…. நான் அறநிலைய ஆட்சித்துறை அலுவலத்திற்கு சென்றேன். தலைமை ஆணையர் சின்னைய்யாபிள்ளை “நாளைக்குத்தானே வழக்கு நாளை வாருங்கள்” என்றார். மற்றொரு ஆணையர் மண்ணாடி நாயர் “உத்தமமான தொண்டு செய்யும் உங்களை இப்படி வழக்கு போட்டு தொந்தரவு செய்கிறார்களே” என்று வருந்தினார். மற்றொரு ஆணையரான கஜபதி நாயக்கரை சென்று பார்த்து “வணக்கம்” என்றேன். அவர் என்னைப் பார்த்து முகத்தைச் சுளித்து “நீர் ரொம்ப டிரபிள் கொடுக்கிறீரே” என்றார். நான் மௌனமாக இருந்தேன். அவர் சிரித்து என்ன நான் சொன்னதற்கு ஒன்றும் மறுமொழியை காணோமே என்றார். அவர் “ஞானசபைகளைக் கட்டினீர். டிரஸ்டிகளைக் கேட்டுத்தானே கும்பாபிஷேகத் தேதிகளை நிர்ணயிக்க வேண்டும். கொத்தனார் வீட்டைக் கட்டினால் கட்டிய கொத்தன் வீட்டுக்காரரை கேட்காமல் கிரகபிரவேச தேதியை வைக்கலாமா?” என்று கேட்டார். அவர் சொன்ன உவமை பொருந்தாது. வீடு ஒருவனுக்கு சொந்தமான ஒன்று. ஞானசபை யாருக்கும் சொந்தமானதன்று. கொத்தன் கூலிக்கு வேலை செய்பவன் நான் பயன்கருதாது பணிபுரிபவன். எடுத்து விளக்கினால் விவாதம் விளையும் ஆதலால் நாளைக்கு வருவேன் என்று மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்.
குடநீராட்டும் தங்கக்கலசமும்: கொள்கையா குத்தகையா?
மறுநாள் ஆணையர் அறங்காவலரைப் பார்த்து உங்கள் வழக்கு என்ன என்று வினவ அவர்கள் “சத்தியஞான சபையில் ராமலிங்கசுவாமிகள் தங்கக்கலசம் வைக்கவில்லை; வாரியார் நூதனமாக வைத்துவிட்டார். இது பெரும்பிழை” என்று கூறினார்கள். ஆணையர் என்னைப் பார்த்தார், “வள்ளலார் ஞானசபை கட்டும் போது இவர்கள் உடன் இருந்திருப்பார்கள். அப்போது நான் இல்லை. ஆனால் ஞானசபையில் முன்பு இருந்த தங்கக்கலசத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன், அழித்துவிடவில்லை. நான் முன் இருந்தது போலத்தானே திருப்பணி செய்ய வேண்டும்? அதைப் போலத்தான் இப்போது முன்பிருந்த கலசத்தை விட சிறிது அழகாக செய்திருக்கிறேன். நீங்கள் வடலூர் வரும் போது பழைய கலசத்தை காட்டுவேன்” என்றேன்.
சின்னையா பிள்ளை அதிர்ச்சி அடைந்தார், “அப்படியா? பழைய கலசம் இருக்கிறதா? நீங்கள் கலசமே இல்லை என்றீர்களே ” என்றார். ஆணையர் அறங்காவலர்களை நோக்கி “கலசம் விவகாரம் முடிந்தது. கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறீர்களே, வேறு காரணங்கள் உண்டா?” என்று கேட்டார். “வள்ளலார் கொள்கைக்கு மாறாக இவர் கும்பாபிஷேகம் செய்வதை நாங்கள் தடுக்கிறோம்.” என்று கூறினார்கள்.
vadalur_sabhaiநான் வள்ளலாருடைய கொள்கைக்கு மாறானவன் இல்லை. எனக்கும் வள்ளலார் கொள்கை நன்கு தெரியும். சத்திய ஞானசபை உருவம் இல்லாத ஜோதி வழிபாட்டை உடையது. மேட்டுக்குப்பத்திலிருந்து பாபஹர தீர்த்தத்தை குடத்தில் கொணர்ந்து ஞானசபையில் வைத்து எல்லா அன்பர்களும் சேர்ந்து ஆறுவேளை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து அந்தத் தீர்த்தத்தை எடுத்து ஸ்தூபிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஏற்பாடு” என்றேன். இது நல்ல ஏற்பாடு என்றார் சின்னையா பிள்ளை. கஜபதி நாயக்கர் குறுக்கிட்டு “ஸ்தூபி நீராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஜோதி வழிபாடு மட்டும் போதும்” என்று ஓங்கியடித்து கூறினார். “நான் நாகப்பட்டினம் மரக்கடை அ.மு.சுப்பராய செட்டியாரின் உபயமாக 48 தோலா செலவில் தங்கமுலாம் கலசம் செய்வித்தேன். கலசத்துக்கு முலாம் இட்டவர் இஸ்லாமிய அன்பர். கும்பாபிஷேகத்தின் போது லட்சோப லட்சம் ஜனங்கள் சேருவார்கள். ஜோதிவழிபாட்டை அனைவரும் ஏககாலத்தில் தரிசிக்க முடியாது. ஸ்தூப நீராட்டு செய்தால்தான் அனைவரும் ஏககாலத்தில் தரிசித்து தரிசனம் செய்தோம் எனும் நிறைவை பெறுவார்கள்” என்றேன்.
சின்னையா பிள்ளை இதைக் கேட்டு “அய்யா சொல்லுவது சரிதான்.” என்று சொல்லி கஜபதி நாயக்கரின் தொடையை ஒரு தட்டு தட்டி “நீர் சும்மா இரும்” என்றார்…. அறங்காவலர்கள் “கும்பாபிஷேகத் தேதி நெருக்கமாக இருக்கிறது கடைகளை ஏலம் விட போதுமான அவகாசம் இல்லை” என்றார்கள். சின்னையாபிள்ளை அவர்களை பார்த்து “கும்பாபிஷேகம் வாரியார் நடத்துகிறார். உங்களுக்கு கடுகளவு செலவில்லை. கடைகளை ஏலம்போடுவதில் சிறிது பணம் வந்தாலும் பிரச்சனையில்லை. வாரியாருடன் ஒத்துழையுங்கள்” என்றார்.
மீண்டும் தடங்கல்
ஏப்ரலில் சின்னையாபிள்ளை வடலூர் வருவதற்கு முன் அவர் மனம் மீண்டும் மாறியிருந்தது. வடலூரில் ஒரு கூட்டம். அங்கு என்னைப் பார்த்து “மக்களுக்கு கும்பாபிஷேகத்தில் விருப்பம் இல்லை போல தெரிகிறது, எனவே வேண்டாம்” என்று சொன்னார். நான் விசனத்துடன் அமர்ந்திருந்தேன். சின்னையா பிள்ளை புறப்பட்டார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் கக்கத்தில் கம்பை வைத்துக்கொண்டு அவரை எதிர்த்து நிமிர்ந்து நின்று “எஜமான்! வாரியார் செய்தால் ஒரு சொம்புதான் மேலே ஏறும். மறுத்தால் 1000 சொம்புகள் மேலே ஏறி ஸ்தூபிக்கு நீராட்டு நடக்கும். எஜமானுக்கு எச்சரிக்கை செய்கிறேன்” என்றான்.
அவர் அதைக் கேட்டு அஞ்சிய முகத்துடன் காரில் ஏறி சென்றார். எழுத்து முகமாக எனக்கு நீராட்டு செய்ய வேண்டாம் என கமிஷனருடைய கடிதம் வந்திருந்தது. நான் புறப்பட்டு ஓ.பி. ராமசாமி ரெட்டியாரைச் சென்று பார்த்தேன். … நான் எனக்குள் எண்ணிக்கொண்டேன். நான் அருணகிரிநாதருடைய பக்தன். …ராமலிங்க வள்ளலார் சிறந்த ஞானமூர்த்தி. அவருடைய பக்தர்கள் சிலருக்கு விருப்பமில்லாத விஷயத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்?
வடலூரில் ராமலிங்க வள்ளலாருக்கு நாங்கள் தான் வாரிசு என சொல்லிக்கொள்ளும் முக்கியமான சிலரை அழைத்து “உங்கள் இஷ்டப்படி செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு பெரும் திகைப்பு ஏற்பட்டது. எல்லாரும் ஒன்றுகூடிப் பேசி என்னிடம் வந்தார்கள். “நீங்கள் 9 வருஷம் இந்த சபைக்காக இரவுபகலாக உழைத்து சபையைக் கட்டியிருக்கிறீர்கள். உங்கள் மனம் நோவ நாங்கள் நடக்கக் கூடாது. இந்த சத்திய ஞானசபையின் அமைப்பு வேறு எங்கும் இல்லாதது. தமிழருக்கே உள்ள தனிப்பெருஞ்சிறப்பு உடையது ஆதலால் ஸ்தூபி நீராட்டும் பணியை குருக்களுக்கு பதில் நீங்களே செய்ய வேண்டும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.
நான் “இத்தனைக் காலம் குருக்கள்தான் பூஜை செய்து கொண்டு வருகிறார். கும்பாபிஷேகத்துக்கு அவரை விலக்கிவிட்டு நான் செய்வது பொருத்தமாகாது. இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று கூறினேன். அன்று இரவு முழுவதும் அவர்களுக்கும் எனக்கும் தூது நடந்தது. அன்று இரவு ஒரு சிறிதும் கண் இமை பொருந்தவில்லை. கடையாக குருக்கள் உடன் வர மேட்டுக்குப்பத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவலை ஓதி குருக்களே நீராட்டுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கும்பாபிஷேகமும் வழக்கும்
24-4-1950 காலை 9 மணிக்கு ஓ.பி. ராமசாமி ரெட்டியாருடைய தலைமையில் ஞானசபை அர்ச்சகராகிய பாலசுப்ரமண்ய சிவாச்சாரியாரின் புதல்வர் ஸ்ரீசபேச சிவாச்சாரியார் ஸ்தூபிக்கு நீராட்டினார். அறங்காவலர்கள் கும்பாபிஷேகத்தை நிறுத்தவேண்டுமென்று இஞ்சங்ஷன் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்களாம். காவல்துறையினர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தங்கியிருக்கிற இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கும்பாபிஷேகத்தை செய்யக்கூடாது என்ற உத்தரவைக் கண்டதும் ரெட்டியார் ரௌத்திராத்காரமாகச் சீறி “இது அரசாங்கமா? தனிப்பட்ட ஒருவர் இத்துணைப் பெரிய மகா கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக கும்பாபிஷேகத்தை நிறுத்துவதா? இது அக்கிரமம் பேசாமல் போங்கள்” என்று சத்தமிட்டாராம். காவல்துறையினர் கும்பாபிஷேகத்தை நிறுத்தாமல் பேசாமல் இருந்துவிட்டார்கள். இந்த தகவலை ரெட்டியார் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு தெரிவித்தார்கள்.கும்பாபிஷேகம் முடிந்து நானும் ரெட்டியாரும் பிரசங்க மேடைக்கு வந்தோம். எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது.
அவர் நாண நன்னயம்
வாரியார் பூஜை
வாரியார் பூஜை
சென்னைக்குச் சென்ற போது ஸ்தூபி நீராட்டு மலர், ஞானசபைப் படம், திருநீற்றுப்பை இவைகளை எடுத்துக் கொண்டு போய் இந்து அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் சின்னையாபிள்ளையிடம் கொடுத்து “வடலூர் திருப்பணிக்கு கும்பாபிஷேகத்துக்கு தாங்கள் செய்த உதவிக்கு என்றும் நன்றி என்று கூறினேன். அவர் நாணத்துடன் “நான் ஒரு உதவியும் செய்யவில்லையே! இடையூறுதானே செய்தேன்!” என்று கூறினார்.
வடலூர் சத்தியஞானசபை திருப்பணி வரவு செலவு அறிக்கைகளை 400 பக்கத்தில் அச்சிட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கினேன். ஒரு சமயம் சென்னை பூக்கடை மல்லீசுவரர் கோயிலில் நான் விரிவுரை செய்து கொண்டிருக்கும் போது சின்னையா பிள்ளை அங்கு வந்தார். அவர் “வாரியார் வடலூர் திருப்பணியை நேர்மையாக நடத்தி முடித்தார். 400 பக்கத்தில் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.அந்தப் புத்தகத்தை அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன். அது பற்றி குற்றம் குறை இதுவரை எவரும் கூறவில்லை. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நேரிசை வெண்பா
என்றும் மறவேன் இடர்பலவும் நீக்கியே
குன்று தனைப்பிளந்த கோமானே!-நன்று
வடலூர் திருப்பணியை மாண்புடனே பூர்த்தி செய்த
நடலூர் அருள்திறத்தை நான்.
[திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதி, தில்லை திருப்புகழ்ச்சபை (சிதம்பரம்) 1979 இல் வெளியிட்ட "வாரியார் வாழ்க்கை வரலாறு" எனும் நூலிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டது.]

No comments:

Post a Comment